ஜோதிடம் என்றால் என்ன?
ஜோதிடம் என்பது ஜோதிஷம் என்ற வட மொழி சொல்லின் தமிழ் வடிவம். ஜோதிஷம் என்ற சொல்லை ஜோதி + இஷம் என்று பிரிகக்லாம், ஜோதி என்ற வட சொல்லுக்கு தமிழில் ஒளி அல்லது ஒளிக்கதிர் என்று பொருள், இஷம் என்ற வடசொல்லுக்கு இயல் என்று பொருள். ஆக ஜோதிஷம் என்றால் ஒளிக்கதிரியியல் என்று பொருள்.
அதாவது சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்கள், மற்றும் சந்திரன், செவ்வாய், புதன், குரு சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் சூரியனிலிருந்து வரும் கதிர்களை வேதி மாற்றங்களுக்கு உட்படுத்தி பிரதிபலிக்கும் கதிர்கள், பூமியில் மனிதர்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது, என்பது குறித்த விஞ்ஞானம் ஆகும்.
இந்த விஞ்ஞான யுகத்தில், கம்ப்யூட்டர் காலத்தில் ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?
இதே கேள்வியை நான் சற்று மாற்றி அமைக்கிறேன். ஜோதிடம் கலையா? விஞ்ஞானமா? அல்லது அஞ்ஞானமா ?
1. ஜோதிடம் கலையா?
ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், ஜோதிடத்தை எதிர்ப்பவர்களும் ஜோதிடத்தை கலை என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் ஜோதிடம் கலை அல்ல.
காரணம், கலை என்பது மெய், வாய், கண்,மூக்கு, காது ஆகிய ஐம்புலன்களால் உணர்ந்து ரசிக்கக் கூடியது.
உதாரணமாக, ஓவியக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, இசைக்கலை, நாடகக்கலை, சமையல் கலை என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க வானவியல் (Astronomy)-ஐயும், கணிதத்தையும் அடிப்படையாக கொண்டது. எனவே ஜோதிடம் கலை அல்ல.
பிறகு ஏன் காலங்காலமாக இன்று வரை ஜோதிடத்தை கலை என்று கூறி வருகின்றனர் என்ற ஒரு கேள்வி இங்கு எழலாம்.
இன்றைய அறிவியல் பாடங்களாகிய B.Sc (Bachelor of Science) Maths, Physics, Chemistry போனன்றவை சுமார் 40-45 ஆண்டுகளுக்கு முன் B.A (Bachelor of Arts) என்றுதான் வழங்கப்பட்டது. முன்பு கலையாக இருந்தவை இன்று அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் அறிவியாலாளர்களும், கல்வியாளர்களும் ஜோதிடத்தை அறிவியலாக அங்கீகரிக்காமல் இருக்கின்றனர்.
இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்தால் ஜோதிடம் அறிவியல் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்பது திண்ணம்.
2. ஜோதிடம் அஞ்ஞானமா? (மூடநம்பிக்கையா? அறிவீனமா?)
நிச்சயமாக ஜோதிடம் மூட நம்பிக்கை இல்லை. தனக்கு முன்னால் ஒரு திரையை வைத்துக் கொண்டு திரைக்கு பின்னால் எதுவுமே இல்லை என்று கூறுவதும், திரைக்கு பின்னால் ஏதேனும் (something) இருக்கலாம் என்ற அடிப்படை சந்தேகம் கூட எழாமல் திரைக்குப் பின்னால் ஒன்றுமே இல்லை என்று சாதிப்பதும், தனக்கு தெரியாத ஒரு பொருளை ( Subject or Concept) பொய், தவறு என்று விமர்சிப்பதுதான் அறிவீனம், மூட நம்பிக்கை, அஞ்ஞானம் ஆகும்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் – அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. குறள் - 355
அதாவது ஒரு பொருள் (Subject or Concept) எந்தத் தன்மை உடையதாக இருந்தாலும் அப்பொருளின் உண்மைத்தன்மை, ஆழம் (Reality and Depth) இவற்றை ஆராய்ந்து அறிதலே அறிவு என்பது வள்ளுவர் வாக்கு.
இந்த அடிப்படையில் ஜோதிடத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல், அடிப்படை கூட தெரியாமல் ஜோதிடத்தை பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் விமர்சிப்பது அறிவீனமே அன்றி அறிவுடமை ஆகாது.
3) ஜோதிடம் விஞ்ஞானமா? (அறிவியலா?)
இல்லை, அறிவியல் என்று தவறாக எழுதி விட்டேன். உண்மையில் ஜோதிடம் ஒரு நுண் அறிவியல் (Micro Science) என்பதே சரி.
ஜோதிடம் விஞ்ஞானம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களோ ஜோதிடத்தை நுண்விஞ்ஞானம் என்கிறீர்கள்... வேடிக்கையாக இருக்கிறது... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இந்த இடத்தில் அறிவியல் என்றால் என்ன? என்பது பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறிவியல் பற்றி அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் தனது Out of my later years -ல் கூறியிருப்பது.
Science is the attempt - to make the chaotic diversity of our sense experience - correspond to a logically uniform system of thoughts.
அதாவது ஒரு பொருளை (Subject or Concept) பகுத்து ஆராயும் போது கிடைக்கக்கூடிய பலதரப்பட்ட அனுபவங்களை, குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தும் முயற்சியே அறிவியல் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.
இந்த அடிப்படையில் மனிதர்கள் உடற்கட்டமைப்பில் ஒத்திருந்தாலும் கல்வி, வாழ்க்கைத்தரம், குணாதிசயங்கள், உடலில் ஏற்படும் நோய்... போன்றவற்றில் வேறுபட்டிருக்க காரணம் என்ன? என்பது பற்றி ஜோதிடத்தின் முதல் நூல் ஆசிரியர்களாகிய சித்தர்களும், ஞானிகளும் ஆய்வு செய்த பொழுது கிடைத்த தகவல்களை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தி தந்திருப்பதுதான் ஜோதிடம்.
சரி.... அப்படிஎன்றால் ஜோதிடத்தை அறிவியல் என்றுதானே கூற வேண்டும். நுண்விஞ்ஞானம் என்று கூறுவது எப்படி பொருந்தும்? என்று யாரோ கேட்கிறார்கள்.
அவசரப்பட்டால் எப்படி? பொறுமையாக கட்டுரை முழுவதையும் படித்துவிட்டு உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். எனக்கு தெரிந்தவரை பதில் தருகிறேன்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
ஜோதிடம் நுண்விஞ்ஞானம் என்பதற்கு ஒரு ஆதாரம் தருகிறேன்.
ஒரு 100 CC – மோட்டார்சைக்கிள்-நல்ல நிலையில் உள்ளது- ஒன்றில், ஓட்டுவதில் அனுபவமும் திறமையும் உள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மற்றோரிடத்திற்க்கு செல்வதாக வைத்துக்கொள்வோம்.
வண்டியின் திறன், பெட்ரோலின் தன்மை, இடையில் ஓய்வு எடுக்கும் நேரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சீராக சென்றால் 5 மணி நேரத்தில் சென்றடைவார் என்று கூறுவது அறிவியல். இதைதான் அறிவியல் மூலம் கூற முடியும்.
ஆனால் இதனிலும் ஒரு படி மேலே போய் துவங்கிய பயணம் தடையின்றி முழுமையடையுமா? இடையில் தடை, தாமதம் ஏற்படுமா? என்பது பற்றியும் தெரிவிப்பது ஜோதிடம்.
எனவேதான் ஜோதிடம் அறிவியலை விட உயர்ந்து நுண் அறிவியலாக பரிணமித்து நிற்கிறது.
ஜோதிடம் மூடநம்பிக்கை, பயனற்றது என்று கூறுபவர்கள் நிச்சயமாக பகுத்தறிவாளர்களாகவோ,அறிவியலாளர்களாகவோ இருக்கமுடியாது. காரணம், இப்பூவுலகில் எந்த ஒரு பொருளையும் (Things (or) Subject (or) Concept) பயனற்றதாக இயற்கை அன்னை படைக்கவில்லை. ஒவ்வொரு பொருளும் ஏதாவதொரு விதத்தில் பயன்படும் என்பதே இயற்கையின் நியதி. உதாரணமாக பாம்பன விஷம்கூட விஷமுறிவுக்காகப் பயன்படுகிறது.
ஒரு பொருளைப்பற்றித் தெரிந்துகொள்லாமலேயே அதைப்பற்றி விமர்சிப்பவர்களை பகுத்தறிவுப் பாமரர்கள் என்றுதான் கூறவேண்டும்.
ஜோதிடம் மூடநம்பிக்கை, எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறுவது தற்காலத்தில் நாகரீகம் (fasion) ஆகிவிட்டது. உண்மையில் யார்யாரெல்லாம் ஜோதிடத்தை மூடநம்பிக்கை என்று கிண்டல், கேலி செய்கிறார்களோ அவர்கள் அனைவருமே ஜோதிடத்தை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள், - இது ஊரறிந்த, நாடறிந்த ரகசியம்.
ஜோதிடம் மூடனம்பிக்கை இல்லை, ஜோதிடம் பயனுள்ளது, ஜோதிடம் விஞ்ஞானதைவிட உயர்ந்தது.
பண்டைய கிரேக்கர்களாலும், பபிலோனியர்களாலும், எகிப்தியர்களாலும் கோள்களையும், மனித வாழ்க்கையையும் சம்மந்தப் படுத்தி யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் ஜோதிடம்... என்பது வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களின் கருத்து. யூகங்கள் பெரும்பாலும் தவறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம். இப்படி இருக்க ஜோதிடம் விஞ்ஞானம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களோ ஜோதிடத்தை நுண்விஞ்ஞானம் என்கிறீர்கள்... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பகுத்தறிவுள்ள நாம் சிந்திக்க வேண்டாமா?
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு குறள் – 423
ஒரு பொருளைப்பற்றி யார் கூறியிருந்தாலும், கூறியவர் படித்தவரா? படிக்காதவரா? வறியவரா? செல்வந்தரா? வயதில் அல்லது அனுபவத்தில் பெரியவரா? சிறியவரா? மகானா? பாமரனா? யார் கூறியிருந்தாலும், கூறியவரைப் பற்றி சிந்திக்காமல் கூறப்பட்ட பொருளின் உண்மைத் தண்மையை ஆராய்வதே அறிவுடைமை ஆகும்.
ஜோதிடத்தை எழுதியது பாபிலோனியர்களா? கிரேக்கர்களா? என்பதல்ல பிரச்சனை.
ஜோதிடம் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது, யூகங்கள் தவறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம், என்று வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களால் கூறப்பட்டதுதான் பிரச்சனை.
ஜோதிடம் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதைவிட, யூகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து எழுதப்பட்டது என்பதுதான் மிகச்சரியானது.
விஞ்ஞானம் அல்லது அறிவியலின் அடிப்படையே யூகங்கள்தானே?
யூகம் இல்லாமல் அறிவியல் ஏது? அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று யூகிக்காமல் எப்படி ஆய்வை மேற்கொண்டு தொடர முடியும்?
அணுவைத்துளைத்து எழுகடல் புகுத்தி குறுக தறித்த குறள் – என்ற ஒளவையாரின் யூகத்தின் விஸ்வரூபம்தானே இன்றைய அணு விஞ்ஞானம்.
இரவையும் ஒளிர வைக்க முடியும் என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் யூகத்தின் விளைவுதானே இன்றைய மெர்குரி, சோடியம் வேப்பர், நியான் இன்னும் பலவிதமான மின் விளக்குகள்.
தந்திக் கம்பி மூலம் பேசமுடியும் என்ற கிரகாம் பெல்லின் யூகத்தின் அபரிதமான வளர்ச்சிதானே இன்றைய செல்போன்.
இப்படி யூகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இன்றைய விஞ்ஞானிகளின் அதிகப் பொருட்செலவில் செய்யப்பட ஆய்வுகள் தோல்வியடைந்திருக்கின்றனவே! எனவே விஞ்ஞானம் என்பது சுத்த ஹம்பக் என்று கூறுவது சரியாகுமா? நியாயம்தான் ஆகுமா?
அதுபோல ஜோதிடத்தை மூடநம்பிக்கை, ஹம்பக் என்று கூறுவது சரியல்ல. நியாயமும் அல்ல.
விஞ்ஞானிகள் யூகித்தால் அது விஞ்ஞானம், பழங்கால முனிவர்களும், சித்தர்களும் யூகித்தால் அது வெறும் யூகம். இது சரியா?
நம் வாழ்க்கையின் போக்கு எவ்வாறு இருக்கும் ? என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள உதவும் ஜோதிடம்
சோதிடம் மூடநம்பிக்கை என்று சொல்பவர்
- தாங்கள் படித்தவர்கள் என்பதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று நினைப்பவர்கள்.
- நமது பண்பாடு-பாரம்பரியம் தவறு என்று சொல்பவர்கள்.
- நமது மூதாதையர்கள் முட்டாள்கள் என்று சொல்பவர்கள்.
தனக்கு பிரச்னை வரும் நேரங்களில் "ஐயோ தெய்வமே" என்று கும்பிடுவது ஏன்?. அது மட்டும் மூட நம்பிக்கை ஆகாதா?
இறை நம்பிக்கையும் சோதிடமும் கிட்டத்தட்ட ஓன்று தான்.
சும்மா கண்ணை மூடிக்கொண்டு வனம் இருட்டு என்று சொல்லாதீர்கள். சோதிடம் தமிழரின் வாழ்கையுடம் பின்னி பிணைந்த ஓன்று. அவற்றால் நமக்கு நன்மையே தவிர தீமை இல்லை.
பண்டைய தமிழன் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் சோதிடமும், வான சாஸ்திரமும் போன்றவற்றை பற்பல தருணங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறான். குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், படிப்பு, திருமணம், ருது , திருவிழா, காலநிலை, கட்டுமானம், பயணம், பணி போன்ற எல்லா துறைகளிலும் பயன்படுத்தியிருக்கிறான்.
சோதிடம் என்பது வாழ்க்கைக்கு ஒரு ஊன்று கோல் போன்றது, அதை பயன்படுத்தி சென்றால் உங்கள் வாழ்கை பயணம் இனிதாக அமையும்.